முதல் காதல்

முதல் காதல்

Chillzee.in 2016 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது..

மாலை வேளைக் காற்று சிலுசிலுவென்று அடித்துக் கொண்டிருக்க, முருங்கை மர இலைகள் காற்றில் ஆடி அசைந்து கொண்டிருந்தன. அந்த மரத்திற்கு அடியில் நாற்காலியைப் போட்டு, கண் இமைகளை மூடி, மலரும் நினைவுகளுக்குள் மலர்ந்து கொண்டிருந்தார் மீனாட்சி.

மீனாட்சியின் நினைவுகள் கலையா வண்ணம், ஓசை எழுப்பாமல் வெளிக் ‘கேட்’டைத் திறந்து கொண்டு வந்த அவரது மருமகள் நந்தினி, அவரை வாத்சல்யத்துடன் பார்த்தவாறே, கையைப் பிடித்துக் கொண்டிருந்த மகளிடம், “ஸ்ஸ்ஸ்…” என உதட்டின் மேல் விரலை வைத்து, சத்தம் போடாதே என்று சைகை செய்தாள்.

தாயின் செய்தியைப் புரிந்த கொண்ட மூன்று வயது மகள் சாதனாவும் தாயைக் கடைப்பிடித்து, பிஞ்சு இதழ்களின் மேல் தளிர் விரலை வைத்தபடி, ‘ஸ்ஸ்ஸ்’ என்று நுனிப் பாதங்களில் பூனையைப் போல் வீட்டின் உள்ளே சென்றாள்.

மரநிழலில் கண் மூடி அமர்ந்திருந்த மீனாட்சியின் செவிகளில் கலவையான குரல்கள் எதிரொலிக்க, அந்தக் குரல்களுக்கேற்ப முகத்தின் உணர்ச்சிகள் நொடிக்கொரு தரம் மாறிக் கொண்டிருந்தன.

தன் கணவர் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றியதால் அவருக்கு இந்த முருங்கை மர நிழலை மிகவும் பிடிக்கும். ஏதோ அவர் நிழலிலே இளைப்பாறுவதாகத் தோன்றும். அந்த இனிய நினைவுகளில் மீனாட்சியின் முகத்தில் முறுவல் பிறந்தது.

சிதம்பரம், காவல் துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றினார். வேலையை மூச்சாக நினைத்துச் செயல்படுவார். ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதற்கேற்ப, தனக்கு இருப்பது போதும் என்ற பெரும் மனம் கொண்டவர்.

சிறுகச் சேர்த்து, தன் ரத்தத்தின் ரத்தங்களை குடி வைப்பதற்கென அழகானதொரு சிறிய வீட்டைக் கட்டினார். அப்படிச் சொந்தமாகக் கட்டிய வீட்டைப் பார்வையிடுவதற்குத் தன் குடும்பத்தைப் பெருமையுடன் அழைத்துக் கொண்டு சென்றவர், அந்த வீட்டின் முன்னால் முருங்கைக் கொம்பை நடுவதற்கு குழி தோண்டிக் கொண்டிருந்தார்.

“ஏங்க, முருங்கை மரத்தை வீட்டுக்கு முன்னாடி வைக்கக் கூடாது எனச் சொல்லுவாங்க…” என்றபடியே வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி வெளியில் வந்தார்.

நிமிர்ந்து மனைவியைப் பார்த்து, “ஏம்மா, வேதாளம் வந்து தொங்குமா என்ன?” எனப் பரிகாசமாகக் கேட்டாலும் அவர் செய்து கொண்டிருந்த பணியைக் கைவிடவில்லை சிதம்பரம்.

“அதில்லைங்க, பலமாக் காத்தடிச்சா முறிஞ்சுடுமே… சீக்கிரம் முறிஞ்சிடுங்கறதால தான் அதன் பெயரே முருங்கை… அது நமக்கு இடைஞ்சலா இருக்குமே…” என மீனாட்சி ‘படபட’வென்று பதில் சொல்லும் பொழுதே, தாயைப் பின்பற்றி வெளியில் வந்த அவர்கள் பெற்ற புதல்வி ரஞ்சனி இடையில் புகுந்தாள்.

“வேதாளம் புதுசா வந்து தொங்கணுமா அப்பா? அதான் தினம், தினம் நம்ம வீட்டிலே நடக்குதே…” எனத் தம்பி விக்ரமை பார்த்துக் கிளுக்கிச் சிரித்தாள் அந்த மங்கை.

“வேண்டாம் அக்கா… அப்புறம் வேதாளத்தின் அக்கா மட்டும் என்ன பெரிய அழகியான்னு நான் கேட்க வேண்டி வரும்” எனச் சிலிர்த்துக் கொண்டான் விக்ரம்.

மகவுகளின் செல்லச் சண்டையில் தலையிடாமல் புன்சிரிப்புடன் ரசித்தனர் மீனாட்சியும் சிதம்பரமும்.

“சொல்லுவடா சொல்லுவ… என் முகம் அம்மா மாதிரி அழகு… அதைப் பார்த்து வேதாளம் எனச் சொல்லுவியா? அப்பா, நீங்களே சொல்லுங்க… அம்மாவோட அந்த அழகுல மயங்கித் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என வேறொரு திரியைக் கொளுத்திப் போட்டாள் ரஞ்சனி.

விக்ரம் தாயின் செல்லப் பிள்ளை. தாயை யாராவது குறை சொன்னால் அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவான். அதனாலேயே அம்மாவைப் போல் அழகு என்று ரஞ்சனி சொல்லி வைக்க, அவனால் அதை எதிர்த்து ஓர் வார்த்தைச் சொல்ல முடியுமா, என்ன?

என்ன சொல்வது என வார்த்தைகளை விக்ரம் தேடிக் கொண்டிருக்க, “நீ வேற ஏம்மா… உங்க அம்மாவைப் பொண்ணுப் பார்க்கப் போனப்போ மஞ்சளைப் பூசி, நல்லா மஞ்சள் விளக்குல நிக்க வச்சு என்னை ஏமாத்திட்டாங்க…” எனச் சொன்ன சிதம்பரத்தின் வாய் தான் பொய்யை உதிர்த்தன.

கண்களோ, முதன் முதலில் மீனாட்சியின் மேல் கொண்ட அதே காதலைக் கொட்டிக் கொண்டிருந்தன .

“அந்தக் காலத்துலேயே ‘போட்டோ ஷாப்’ பண்ணிட்டாங்கன்னு சொல்லுங்க…” என மேலும் தாயை வம்புக்கு இழுத்தாள் மகள்.

“என்னை வம்புக்கு இழுக்கலைன்னா அப்பாவுக்கும் பொண்ணுக்கும் தூக்கம் வராதே.. வேலையை முடிச்சுட்டு வாங்க…. நேரத்தோட வீட்டுக்குப் போகலாம்” என மீனாட்சி அதட்டினார்.

“அய்… அப்பா இது தானே வேண்டாங்கறது… பொண்ணுப் பார்க்கப் போனப்போ அம்மாவை சரியாப் பார்க்க முடியலைன்னு மறுநாள் விடியலிலேயே போய் திண்ணைல உட்கார்ந்து ‘சைட்’ அடிச்ச ஆளாச்சே நீங்க…” என மகன் நேரம் பார்த்து அவர் காலை வாரினான்.

மகன் சொன்னதைக் கேட்டு முறுவலித்த சிதம்பரத்தின் கண்களில் அவர்கள் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்திருந்தது.

உண்மை தான். மீனாட்சியைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்தே சிதம்பரத்தின் மனதில் மீனாட்சி நீக்கமற இடம் பிடித்துவிட்டாள். பார்த்து முற்றிலும் ஒரு நாள் கூட ஆகாத பெண்ணின் நினைவு அவரை இப்படி அலைக்கழிக்கும் என்று முன்தினம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்.

மீனாட்சி அதிகாலையில் எழுந்து கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்குச் செல்வாள் எனத் தெரிந்து கொண்ட சிதம்பரம் அன்றிரவே நடுச்சாமத்தில் மீனாட்சியின் வீட்டுத் திண்ணையில் போய் தவம் கிடந்தார்.

இதையறியாத மீனாட்சி வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து வர, திண்ணையில் சுருண்டிருந்த சிதம்பரத்தின் உருவம் கண்களில் விழுந்தது. உடனே, “ஐயோ திருடன்” எனக் கத்த ஆரம்பித்தாள்.

மீனாட்சியின் அலறலில் சிதம்பரம் அவளின் வாயைப் பொத்தி, “நான் தான்… போலீசையே திருடனாக்கிட்டியே” என இரகசியக் குரலில் நகைச்சுவைத் ததும்பச் சிரித்த சிதம்பரத்தின் முகம் மீனாட்சியின் மனதில் ஆழப் பதிந்ததில் ஆச்சர்யமில்லை.

இருவருக்குமே அது முதல் காதல் என்பதில் ஐயமில்லை… ஆனால் எக்கணத்தில் காதல் பிறந்தது என்பதற்கு இருவரிடத்திலும் பதிலில்லை.

முதல் காதலின் வெற்றி என்பது காதலர்கள் ஒன்று சேர்வதிலில்லை. அதன் வெற்றி கடந்து போன வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து இனிமை கொள்வதில் உள்ளது.

பழைய நினைவுகளில் மீனாட்சியும் சிதம்பரமும் நெகிழ்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
****
அன்றிரவு வேலை முடிந்து, நள்ளிரவு தாண்டித் தான் சிதம்பரம் வீட்டுக்கு வந்தார். உணவை அருந்திவிட்டுக் கண்ணயர்ந்தவர், சற்று நேரத்தில் பாயில் படுத்துக் கொண்டிருந்த மனைவியின் “ஆ” வென்ற அலறலில் திடுக்கிட்டு எழுந்தார்.

அவசரமாக விளக்கைப் போட, குழந்தைகள் இருவரும் தூக்கத்தில் இருந்து விழித்து, கண்ணைத் தேய்த்துக் கொண்டனர்.

மிரள, மிரள நின்று கொண்டிருந்த மீனாட்சி, பாயைச் சுட்டிக் காட்டினார். அங்கே சிதம்பரத்தின் மீசையை விடப் பெரிய மீசையை வைத்திருந்த கரப்பான் பூச்சி, அதை ஒய்யாரமாக ஆட்டிக் கொண்டு நின்றது.

சிதம்பரத்தைப் பாதித் தூக்கத்தில் எழுப்பியதற்கு அவர் கோபம் கொள்ளவில்லை. மாறாக மனைவி காட்டிய கரப்பான் பூச்சியை அடித்துத் தூர எரிந்துவிட்டு,

“ஏம்மா, இந்த அர்த்த ராத்திரியில இப்படிச் சத்தம் போட்டா நான் தான் உன்னை அடிச்சுக் கொடுமைப் படுத்தறேன்னு எல்லோரும் தப்பா நினைச்சுக்கவா? சத்தமில்லாம என் பெயரை ரிப்பேர் பண்ண நல்லா வேலை செய்யற…” என்றார் புன்சிரிப்புடன்.

சிதம்பரம் காவல்துறையில் பணியில் இருந்தாலும் இதுவரை யாரும் அவர் மற்றவரைக் கடிந்து பேசிப் பார்த்ததில்லை. நண்பர் பார்த்தசாரதி கூட, ‘நீ போலீஸ் வேலைக்கே லாயக்கில்லை, சிதம்பரம்’ என்று சொல்வார்.

மனைவி மக்களிடம் அதீத பாசம் கொண்டு அவர்களை நேசிப்பவர். சொத்து சுகங்களை விட அன்பையும், சந்தோஷத்தையும் முன் நிறுத்துபவர். அவர்கள் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஓர் அழகிய கனவு.

வீட்டைக் கட்டிய சில மாதங்களிலேயே சிதம்பரத்திற்கு வேலை உயர்வுடன் பணி மாற்றலும் கிடைத்தது. பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பை முன்நிறுத்தி சிதம்பரம் மட்டுமே மதுரைக்குச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.

அவர்களின் அழகிய கூட்டைக் கலைக்கவென்று காலன் காத்திருக்கிறான் என்பது தெரியாமல் சிதம்பரம் மதுரைக்கு ரயிலேறினார். ஒரே வாரத்தில் மீனாட்சியின் தலையில் இடியை இறக்கியவாறு அந்தத் துயரச் செய்தி வந்து சேர்ந்தது.

முக்கிய புள்ளி ஒருவருக்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த சிதம்பரத்திற்கே பாதுகாப்பில்லாமல் போய் விட்டது. ரயில்வேத் துறை ஆட்களிடம் அந்த முக்கிய புள்ளியை ஒப்படைத்து விட்டு, மனைவி மக்களுடன் தொலைபேசியில் பேசுவதற்காக வீடு செல்ல வேண்டும் என அந்த இரவு நேரத்தில் உற்சாகமாகப் புகைவண்டியில் இருந்து இறங்கினார் சிதம்பரம்.

அதே சமயத்தில் மெதுவாக வண்டி நகர ஆரம்பிக்க, அவர் தன் காலை பிளாட்பாரத்தில் வைத்தார். அந்தக் காலன் வாயைத் திறந்து வைத்துக் கொண்டிருப்பதைப் போல் பிளாட்பாரம் உடைந்து பெரிய ஓட்டையுடன் இருந்ததை அந்த இருட்டில் அவரால் பார்க்க முடியவில்லை.

செப்பனிடப்படாத அந்த இடத்தில் இறங்கியது அவர் தவறா, இல்லை காலத்தின் தவறா?
எதிலும் நிதானமாகச் சிந்தித்து, நிதானமாகச் செயல்படும் அவரை எது அங்கே இழுத்துச் சென்றது? ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்?

எல்லாம் ஒரே நொடியில் முடிந்துவிட்டது. புகைவண்டியின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டாரா, அல்லது காலத்தின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டாரா? மீனாட்சி சிதம்பரத்துடன் வாழ்ந்த அந்த இனிய வாழ்க்கைக்கு விதி முற்றுப் புள்ளியிட்டு முடித்து விட்டது.

அரசுப் பணி என்பதால் கருணை அடிப்படையில் கிடைத்த எழுத்தர் வேலையில் வைராக்கியத்தைக் கடைபிடித்துக் கொண்டு, ‘உங்க அம்மாவுக்கு எதுவும் தெரியாது’ என்று சொன்ன சிதம்பரத்தின் கூற்றைப் பொய்யாக்கிவிட்டு, பெற்ற மகவுகளைக் கரையேற்றப் போராடினார் மீனாட்சி.

ஆண்டாண்டு காலமாகப் பொழிய வேண்டிய அன்பையும், பாசத்தையும் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் மனைவி மக்கள் மேல் சிதம்பரம் செலுத்தியது, இந்த முடிவை முன்பே அறிந்து வைத்ததால் தானோ என்று மீனாட்சி அடிக்கடி நினைப்பது உண்டு.

முருங்கை மர நிழலில், அமர்ந்திருந்த மீனாட்சியின் கண்களில் கண்ணீர் கோடுகளாக இறங்கியது. இது இன்று நேற்றல்ல, சிதம்பரம் அவரை விட்டுச் சென்று பல வருடங்கள் கடந்தும் மீனாட்சியின் மனதில் இன்றும் அவரின் பிரிவு ரணமாக அறுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

முருங்கை மரத்தில் இருந்த முட்டை போன்று முழித்துக் கொண்டிருந்த மொட்டொன்று, மெத்தென மீனாட்சியின் கன்னத்தில் விழுந்து அவரை நனவுலகத்திற்கு அழைத்து வந்தது.

அப்பொழுது தான் கன்னங்களில் வரைந்த காவியம் அவர் நினைவுக்கு எட்ட, அவசரமாக அதைக் கை கொண்டு துடைக்க முனைந்தார். அதுவரை அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் பேத்தி அதை விட அவசரமாக, “பாட்டி உங்க ‘கிரையிங் ரூம்’ல போய் அழுதுட்டு வாங்க… இது சிரிக்கிற இடம்”… என்றதும் மீனாட்சிக்குப் புன்னகை அரும்பியது.

அவள் குறும்பு செய்து அடம் பிடித்து அழுதால் இப்படித் தான் அவளைக் கண்டிப்பார்கள் அவளைப் பெற்றவர்கள். அவளும் கண்ணைத் துடைத்தவாறு, ‘ஹி.. ஹி..ஹி..’ என்று சிரிப்பாள்.

அதை அவள் பாட்டியிடமே சொன்னதும் மீனாட்சிக்குச் சிரிப்புப் பொங்க, பேத்தியை அணைத்துக் கொண்டார். இதை உள்ளிருந்து மருமகள் நந்தினி கவனித்துக் கொண்டிருந்தாள்.

அன்றிரவு நந்தினி, கணவன் விக்ரமிடம், “ஏங்க, அத்தை இன்னும் எத்தனை நாள் தான் மாமாவை நினைச்சு அழுதுட்டே இருப்பாங்க…? இத்தனை நாள் சாதனா வீட்டில் இருந்தாள். அதனால் அவங்களுக்குத் தனிமை இல்லை… இப்போ அவளும் ஸ்கூலுக்குப் போறா… அதனால நான் ஒண்ணு சொல்லட்டுமா?” எனக் கேட்டு அவள் மனதில் உதித்த ஆலோசனையைச் சொன்னாள்.

நந்தினி சொன்னதை அப்படியே தாயிடம் எடுத்துச் சென்று பேசினான் விக்ரம். “அம்மா, நீங்க பகல்ல தனியா இருக்கறீங்களே… வேணா ஓர் குழந்தைகள் கவனிப்பு மையம் ஒன்றைத் துவக்கலாமா?” எனக் கேட்டான்.

மீனாட்சிக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்கும் என்ற எண்ணத்தில் தான் விக்ரம் அவ்வாறு கேட்டது.

ஆனால் மீனாட்சி, “பணத்திற்காகப் பார்த்துக்கறதா? அதில அன்பு எங்கிருக்கு? அது சரி வராது” என்று மெல்லிய குரலில் சொன்னார்.

விக்ரமிற்கு மனம் பாரமாகக் கனத்தது. படபடவென்று பேசும் அந்தத் தாயை அவன் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. தாய் சொன்னதற்கு மறுபேச்சு பேசாமல் சென்றுவிட்டான்.

ஆனால் சில தினங்களில் மகனை அழைத்த மீனாட்சி, “வேணா ஒரு முதியவர் காப்பகம் நடத்தலாம். பணம் செலவாகும்… பரவாயில்லை… சமாளிக்கலாம். அவர்களுக்குத் தான் இப்போது நிறைய அன்பு தேவைப்படுகிறது” என்றார்.

தாய் சொன்னதைக் கேட்டதும் விக்ரமிற்கு உற்சாகம் தாளவில்லை. உடனே தாயின் மனதில் உருவான கருவிற்கு, அவர்கள் வீட்டின் பின்னாலேயே உயிர் தந்துவிட்டான்.

மூன்று வருடங்கள் கழிய, அந்த மையத்தில் இப்போது முப்பதுக்கும் மேற்பட்ட வயதானவர்கள் இருக்கிறார்கள். நன்கொடை, அன்பளிப்பு, சொந்தப் பணம் என்று அந்தக் காப்பகம் மிக நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.

மீனாட்சியையும், அவர் பணியையும் கேள்விப்பட்டு ஊடகங்களில் இருந்து வந்து பேட்டி கண்டனர். அந்தப் பேட்டியோடு அவரைப் பாராட்டிச் செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.

“பரவாயில்லை மீனாட்சி… எப்படியோ, நீ உன் கஷ்டத்தில இருந்து வெளியே வந்துட்ட… எதையும் தாங்கும் பக்குவம் வந்துடுச்சு” எனப் பக்கத்து வீட்டு பத்மா மெச்சிக் கொள்ள, மீனாட்சி மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டார்.

அந்தச் செய்தியினைப் படித்த பெங்களூரில் வசிக்கும் மகள் ரஞ்சனி, தாயை அழைத்து, தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டாள். “இப்போ தான்ம்மா எங்களுக்கு நிம்மதியா இருக்கு. ஒருத்தர் உலகத்தை விட்டுப் போய்ட்டா அவரோட நம்ம வாழ்க்கை முடிஞ்சிராது. அதை நீங்க இப்போ புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க” என்றாள் மகள்.

தந்தை மேல் அதீத அன்பு கொண்டவள் தான். தந்தை பிரிந்த சமயத்தில் அவரை நினைத்து கண்ணீருடன், கவிதையையும் சேர்த்து வடித்தவள் தான். ஆனால் காலம் அவளுக்கு நிதர்சனத்தைப் புரிய வைத்தது. அதனாலேயே தாய்க்கும் அதை எடுத்துச் சொன்னாள்.

தமக்கைக்குச் சற்றும் குறையாமல் விக்ரமின் மனநிலைமையும் உற்சாகமாகத் தான் இருந்தது. தினமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அன்னைக்கு இப்பொழுது நேரமே கிடைப்பதில்லை.

காலையில் எழுந்தால் தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டு பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறாரே. இல்லாவிட்டால் அழுதே கரைந்திருப்பார்…

அன்று இரவு விக்ரம், மனைவி நந்தினியிடமும் அதைப் பகிர்ந்து கொண்டான். “பரவாயில்லை நந்தினி, நாம் நினைச்ச மாதிரியே அம்மா மனசு தேறி அவங்க வழியில வேலை செஞ்சுட்டு இப்போ சந்தோஷமா இருக்கறாங்க… எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு.” மகள் சொன்னதையே மகனும் சொன்னான்.

ஏதேச்சையாக அந்தப் பக்கம் வந்த மீனாட்சி மகன் சொன்னதைக் கேட்க நேர, புன்னகைத்துக் கொண்டே தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டார். அது அவர் படுக்கையறை மட்டும் அல்ல… ரகசியங்கள் பொதிந்த பொக்கிஷ அறை.

இரவு படுக்கையில் சரிந்ததும் தனிமையில் தவிக்கும் மீனாட்சி சிந்தும் கண்ணீரைப் பற்றி யார் அறிவர்? எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், எத்தனை உறவுகள் பிணைந்தாலும் கணவன் என்ற உறவு அவருக்குக் கானல் நீர் தானே?

உடல் மரித்தாலும், நெஞ்சம் நிறைந்த கணவரின் மீதான முதல் காதல் மரித்துப் போகுமா என்ன? அந்தக் காதல் தந்த இனிமையான நினைவுகள் அழிந்து போகுமா என்ன?

தன் மக்களின் சந்தோஷத்திற்காக ஓர் தாயாக அவர் மனதைத் தேற்றிக் கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டார். மற்ற தாய்-தந்தைகளின் ஆதரவிற்காக ஓர் மகளாக மாறி அன்புடன் வாழ்ந்துவிட்டார்.

ஆனால் அன்பு கொண்ட காதல் மனைவியாக உள்ளுக்குள் ஊமையாய் அழுது கொண்டிருக்கும் அவர் வேதனை நெஞ்சை, யார் அறிவர்? சாளரம் வழியே வந்து தொட்டுத் தழுவிச் செல்லும் தென்றல் அறியும்! காற்றோடு போன முருங்கைப் பூ வாசம் அறியும்!

கணவனின் நிரந்தரப் பிரிவை எதிர்கொள்ள காலம் அதற்கு மருந்து என்றார்கள். எவ்வளவு காலம் என்று யாராவது சொன்னதுண்டா? அல்லது, யாருடைய காலம் என்று சொன்னதுண்டா?

வாழும் காலம் முழுவதும் கானல் நீரான வாழ்க்கையை நினைத்து நித்தமும் மீனாட்சியின் ஊமை நெஞ்சம் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும்! அதை அறிந்தவர் உண்டா? இது காதல் பிரிவின் வலி.

ஆனால் இங்கே காதல் தோற்கவில்லை… முதல் முதலில் பூத்த காதல் மீனாட்சியின் நெஞ்சில் என்றுமே வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். காதல் உள்ள வரையில்!!!

(போட்டோ ஷாப் – மென்பொருளை உபயோகித்து, புகைப்படங்களை மெருகு ஏற்றுவது)

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *