ஏ(மா)ற்றமா?

ஏ(மா)ற்றமா?

Chillzee.in 2017 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது….

வேலைமுடித்து வீடு வந்த பாலகுமாருக்கு மனம் எதிலும் ஒன்றவில்லை. எல்லாம் சற்றுமுன்னர் நண்பனிடமிருந்து வந்த அழைப்பால்.

“பாலா, எப்படிக் கேட்கிறது எனத் தெரியலை. வந்து… ஓர் முக்கியமான விஷயம் கேட்கணும்… வீட்டில் இருக்கியா?” என வெங்கடேஷ் தயக்கத்துடன் கேட்டதே திரைப்படம் முன்னோட்டம் போல் மீண்டும், மீண்டும் பாலகுமாரின் மனதில் ஓடியது.

வெங்கடேஷுக்குப் பணத் தேவையைத் தவிர வேறென்ன முக்கியமானதாக இருக்க முடியும்? கல்லூரி வாழ்க்கைக்குப் பின்னர் மீண்டும் அவனைச் சந்தித்த கடந்த ஆறு மாதங்களில் அது மட்டும் தானே அவனின் புலம்பலாக இருக்கின்றது.

“வீட்டில் இல்லைடா…” என வெங்கடேஷிடம் பட்டென்று பொய் உரைத்தான் பாலகுமார். ஆனாலும் இது இன்றோடு தீர்கின்ற பிரச்சனையல்ல. நாளை மீண்டும் அழைப்பான்.

இப்படி இடையூறாக இருக்குமென்று தெரிந்திருந்தால் இந்தத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை, பூப்போட்டு வரவேற்றிருக்கவும் மாட்டான்… பெருமையுடன் பேசியிருக்கவும் மாட்டான்.

இன்று இப்படி நினைக்கும் பாலகுமார், தன் மகள்களிடம், ‘தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் தகவல் தொடர்பு மிகவும் எளிதாகி விட்டது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்…’ எனப் பொறாமைப்பட்டிருக்கிறான்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் தன் இரு மகள்களுடன் ‘ஐஸ்கிரீம் பார்லரில்’ பாலகுமார் அமர்ந்திருந்த வேளையில், அவன் இளைய மகளின் அலைபேசியில் செய்தி ஒன்று வந்தது.

அதைப் பார்த்துக் கிளுக்கிச் சிரித்தவள், “அக்கா, என் ஃபிரெண்ட் சிங்கப்பூர் டூர் சென்றிருக்கிறாள் என்றேனல்லவா? அங்கே ஓர் பூங்காவில் பஞ்சவர்ணக்கிளிக்கு உணவு கொடுக்க முயன்றாளாம்.

ஆனால் அந்தக் கிளி அவள் தலையில் ஏறி உட்கார்ந்து, அவளைப் பயமுறுத்திவிட்டதாம்… ‘வாட்ஸ் ஆப்’பில் ஃபோட்டா அனுப்பியிருக்கிறாள் பாருங்கள்… ‘வெரி ஃபன்னி’…” என அவன் பெரிய மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இந்தத் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் உங்கள் நட்புறவு அறுந்து போகாமல் இருப்பதற்கு பெரிதும் துணை புரியும்… எங்களுக்குத் தான் அந்தக் கொடுப்பினையில்லை…” என மகள்களிடம் ஏக்கத்துடன் சொன்னான் பாலகுமார்.

“ஏன்ப்பா பொறாமைப்படுகிறீர்கள்? நீங்களும் இதன் வழியே உங்கள் நண்பர்களைத் தேடிப் பிடியுங்கள்…” என்றாள் இளைய மகள்.

“சொல்லறது சுலபம்டா… எல்லாரும் எந்த மூலையில் இருக்கிறார்களோ?” என்றான் பாலகுமார்.

“அப்பா, உங்கள் வலைப்பதிவுகளால் முகமறியா பலரையும் நண்பர்களாக்கி இருக்கிறீர்கள்… காலேஜில் மாணவர்களின் பிரதிநிதியா இருந்த நீங்கள், உங்கள் பழைய நண்பர்களைக் கண்டுப்பிடிக்க முடியாதா என்ன?” எனப் பெரிய மகள் அவனை உசுப்பேற்ற, அவன் தேடல் அன்று ஆரம்பமானது.

அதே வேலையாகச் செயல்பட்டு முதலில் ஓர் வகுப்புத் தோழனை முகப்புத்தகத்தின் மூலம் கண்டுப்பிடித்துவிட்டான். அதன்பின்னர் அவன் வழியாக மற்றொருத்தன் எனப் பட்டியல் நீள ஆரம்பித்தது.

ஆனாலும் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் வெங்கடேஷையும், ஆனந்தையும் மட்டும் கண்டுப்பிடிக்க முடியாததால் அவன் மனம் திருப்தியடைய மறுத்தது. அந்த ஆதங்கத்தை அவன் மகள்களிடம் கொட்ட,

“‘வாட்ஸ் ஆப்ல’ ஒரு ‘க்ரூப்’ ஆரம்பிங்க… தினமும் நண்பர்களிடம் பேசுவதன் மூலம் அவர்களைக் கண்டுப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது” என மகள்கள் சொல்ல, அதைப் பின்பற்றினான். அப்படி ஆரம்பித்த குழுவும், விரைவாக விரிவடைந்தது.

தினமும் காலை வணக்கம் என்று ஆரம்பித்து, இன்றிரவு என்ன உணவு என்பது வரையில் அனைத்து விஷயங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கல்லூரித் தோழர்களும், ‘ஒவ்வொரு மூலையில் இருப்பவர்கள் எல்லாம் உன்னால் தான் ஒன்று சேர்ந்தோம்’ எனச் சிலாகித்தனர்.

‘தன்னால் என்பதைவிட, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் என்றால் சரியாக இருக்கும். அதனால் உலகத்தையே சுருக்கி நம் கைக்குள் அடக்கிவிட்டோமே’ என இறுமாந்திருந்திருந்தான் பாலகுமார்.

அவன் நண்பர்கள் தந்த ஊக்கத்தில் நாளடைவில் வேறொரு வகுப்புத் தோழன் வழியாக வெங்கடேஷ் மற்றும் ஆனந்தின் அலைபேசி எண்களைக் கண்டுப்பிடித்து விட்டான்.

இனிய உணர்வுடன் வெங்கடேஷை அழைக்க, அவன் பாலகுமாரை விடவும் உற்சாகமாகப் பேசினான்.

“டேய் பாலா, நீ இந்த ஊரிலா இருக்க? உன் அப்பாவுக்கு வேலை மாற்றல் வந்து நீ கிளம்பினதும் உன்னிடம் தொடர்பேயில்லை…” என ஆரம்பித்த பேச்சு, கடந்து போன இருபது வருட வாழ்க்கையையும் சுற்றி வந்தது.

அலைபேசியில் புதுப்பிக்கப்பட்ட நட்பு, நேரிலும் தொடர்ந்தது. தன் வீட்டுக்குத் தனியாக வந்தவனிடம், “வாடா, நீ மட்டும் வந்திருக்க… வீட்ல கூட்டிட்டு வரச் சொன்னேனே…” என பாலகுமார் உரிமையுடன் கோபித்துக் கொள்ள,

“பக்கத்தில் ஓர் வேலையாக வந்தேன்… அடுத்த முறை கூட்டிட்டு வரேன்டா…” என்றான் வெங்கடேஷ்.

மனைவியையும், மகள்களையும் நண்பனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த பாலகுமார், பின்னர் அவனைப் பற்றியும், அவன் பணியில் எட்டிய வளர்ச்சியைப் பற்றியும் பெருமையுடன் பேசினான்.

“நீ காலேஜ் படிக்கும் பொழுதே திறமைசாலியாச்சே… இப்போது கேட்கவா வேண்டும்? நான் உயிரோட இருப்பதற்குக் காரணமே நீ தான்டா” என்றான் வெங்கடேஷ்.

கல்லூரிக் காலத்தில் வெங்கடேஷ் விபத்தொன்றில் அடிப்பட்டிருந்தான். அப்போது அவனுக்குத் தேவையான இரத்தத்தை, துரிதமாகச் செயல்பட்டு அலைந்து, திரிந்து சேகரித்துத் தந்தான் பாலகுமார்.

சற்று தாமதித்திருந்தாலும் அவன் உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்காது என மருத்துவர்களே அன்று சொன்னார்கள்.

பின்னர் பேச்சு, பாலகுமாரின் வலைப்பதிவுகளைப் பற்றியும், அதனால் பெருகிய அவன் நட்பு வட்டத்தைப் பற்றியும், தகவல் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும் வலம் வந்தன.

அவனுடன் பழங்கதைகளைப் பேசியதில் பாலகுமாரின் அன்றைய பொழுது மிகவும் உற்சாகமாகக் கழிந்தது. ஆகவே தன் வீட்டுக்கு வருமாறு வெங்கடேஷ் அழைக்கவும், அடுத்த வாரம் தன் குடும்பத்துடன் கிளம்பினான்.

அங்கு சென்ற பின்னரே, வெங்கடேஷின் மகளுக்கு, ‘ஆட்டிசம்’ (மதி இறுக்கம்) இருப்பது பாலகுமாருக்குத் தெரிந்தது. மூளையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

ஆட்டிசம் ஓர் நோயல்ல என்றாலும் வெங்கடேஷின் மகளுக்கு ஆட்டிசம் சற்று கடுமையானதாகவே இருந்தது. மகளின் இந்நிலையைப் பற்றி இதுவரையில் அவன் சொன்னதில்லை.

அவனிடம் தனிமையில் பாலகுமார் விசாரிக்க, “அவளுக்கு உண்டான பயிற்சியைத் தந்து கொண்டிருக்கிறோம்… அவள் சிகிச்சைக்குப் பணம் தண்ணீராய்க் கரைகிறது…

வாங்கும் சம்பளம் எல்லாம் இதற்கே அதிகமாய்ச் செலவாகிவிடுகிறது… அவளைப் பார்த்துக்கவென என் வைஃப்பும் வேலைக்குப் போவதில்லை…” என அன்று ஆரம்பித்த வெங்கடேஷின் புலம்பல், இன்று வரையிலும் தொடர்கிறது.

அதனால் தான், ‘உன்கிட்டே ஒண்ணு கேட்கணும்…’ என வெங்கடேஷ் சொன்னதும், ‘வீட்டில் இல்லைடா’ எனப் பொய்யுரைத்தான் பாலகுமார்.

புது வீடு, புது கார் என அவனுக்கே ஏகப்பட்ட செலவுகள் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறது. இதில் நண்பன் பண உதவி கேட்டால் என்ன செய்வது?

“அப்படியே அவனுக்குப் பணத்தைக் கொடுத்தாலும், எப்போது திரும்ப வரும் எனத் தெரியாது? ச்சே… இப்படியெல்லாம் பிரச்சனை வரும் எனத் தெரிந்திருந்தால் பழைய நட்பைப் புதுப்பிக்காமல் விட்டிருப்பேன்” என மனைவியிடம் புலம்பிக் கொண்டிருக்கையில் ஆனந்திடமிருந்து பாலகுமாருக்கு அழைப்பு வந்தது.

அவனும் வெங்கடேஷைப் பற்றியே பேசினான். “வெங்கடேஷ் பெண்ணுக்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம். அவன் இருக்கிற வரையில் மகளுக்குப் பாதுகாப்பாக இருப்பான். அதன்பிறகு அவளின் துணைக்கு யார் இருக்கிறார்கள் என்ற பெரும்கவலை அவனை அரிக்கிறது.

எனக்குத் தெரிஞ்ச, ஆட்டிசத்துக்கென செயல்படும் மறுவாழ்வு மையத்துக்கு அவனைக் கூட்டிட்டுப் போனேன். சற்று நம்பிக்கையும், தைரியமும் அவனுக்கு கூடியிருக்கு.

மனைவியின் ரணத்தையும் கிளறிவிட்டிடுவோம் என மகளைப் பற்றி அவர்களிடம் மனசுவிட்டுப் பேச முடியலையாம் அவனால். அதனால் தான் நம்மிடம் புலம்புகிறானாம்.

‘பணம் வேணுமா?’ எனக் கேட்டால், ‘சிகிச்சை பற்றியும், ஆட்டிசம் பற்றிய மேலும் விவரங்களையும் தந்து அவனுக்கு ‘மாரல் சப்போர்ட்’ கொடுத்தாலே அது கோடி ரூபாய்க்குச் சமம் என அழறான்டா…” எனப் பேசிவிட்டு வைத்தான் ஆனந்த்.

‘அப்போ என்னிடம் அவன் பணம் கேட்க நினைக்கவில்லையா?’ என பாலகுமாரின் மனதில் நிம்மதி அலையடித்தது.

“அப்பா, வெங்கடேஷ் மாமா இதை உங்கக்கிட்டே கொடுக்கச் சொன்னார்..” எனக் கீழே தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த இளைய மகள் ஓடிவந்து கடிதம் ஒன்றைத் தந்தாள்.

“அவனை எங்கே பார்த்தே? என பாலகுமார் திகைக்க, “இப்போ.. நம்ம அப்பார்ட்மெண்டுக்கு கீழே…” என ஓடிவிட்டாள்.

கடிதத்தை அவசரமாகப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்.

அன்புள்ள பாலா,

நலம் நலமறிய ஆவல்! இப்படித் தான் முன்பெல்லாம் கடிதத்தை ஆரம்பிப்போம். அந்தச் சொற்களில் உண்மை விரவியிருந்தது… ஆத்மார்த்தமான அன்பு புதைந்திருந்தது. ஆனால் இன்று?

தினமும் பதிலை எதிர்பாராமலேயே சம்பிரதாயத்துக்காக, ‘வாட்ஸ் அப்’ என்கிறார்கள்… ‘ஹவ் ஆர் யூ?’ என்கிறார்கள். அப்படி ஆகிவிட்டதா நம் நட்பும்? உண்மையில் வேதனைப்படுகிறேன்…

நம் நட்பு, விட்ட இடத்திலிருந்து மீண்டும் துளிர்த்திருக்கிறது என மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் காலத்தின் சுழற்சியால் அது பட்டுப் போனது எனத் தாமதமாகப் புரிந்து கொண்டேன்.

எனக்குப் பணம் அவசியம் தான்… அதற்காகப் பார்ப்பவர்களிடமெல்லாம் உதவி கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் என்பதை நீ கூடப் புரிந்துகொள்ளவில்லை.

ஒருவேளை எனக்கும் உன்னைப் போல் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருந்திருந்தால் நானும் இது போல் நினைத்திருப்பேனோ என்னவோ?

நான் ஓர் முக்கிய முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என் மகளுக்கு, கடுமையான ‘ஆட்டிசம்’ இருப்பது நீ அறிந்ததே. அவள் வளர்வதும், அதனால் ஓர் பெண்ணிற்கு உரிய இயற்கை மாற்றங்கள் அவளுக்கு நிகழ்வதும் இயல்பு அல்லவா? அவள் கூடிய விரைவில் பருவம் அடைந்துவிடுவாள்.

அதைத் தடுக்கக் கூடிய ஹார்மோன் மருத்துகளைப் பற்றி மருத்துவர் விளக்கினார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே என் மகளுக்குத் தெரியாது. பிற்காலத்தில் அவளால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

அதனால் மருத்துவர் குறிப்பிட்ட ஹார்மோன் ஊசிகளை என் மகளுக்குப் போடுவதா, வேண்டாமா என ஓர் தகப்பனாக எனக்குள் பெரும் குழப்பம்.

இரு பெண்களின் தந்தையான உனக்கு என் கஷ்டம் புரியக்கூடும் என்பதால் அதைப் பற்றி உன்னிடம் ஆலோசனை கேட்கலாம் என நினைத்தேன். நீ இல்லையென்றாலும் உன் மனைவியிடமாவது கருத்துக் கேட்கலாம் என உன் வீட்டுக்கு வந்தேன்.

துரதிர்ஷ்டவசமாக நீ உன் மனைவியிடம் பேசியதையும் கேட்டேன்.

உன்னிடம் பணம் கேட்கப் போகிறேன் என நீயாக அனுமானித்துக் கொண்டாய். பரவாயில்லை… உன் மேல் எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஓர் சராசரி குடும்பத் தலைவனாக நடந்து கொண்டாய்.

நான் வேறு யாரிடமாவது பேசித் தெளிந்து கொள்கிறேன். நான் உன் மேல் கொண்ட நட்பின் காரணமாகவே உனக்கு இதைத் தெளிவுபடுத்த எண்ணினேன்.

நீ சொல்லும் தகவல் தொழில்நுட்பக் கருவிகளால் என் உணர்வுகளை நான் விளக்கி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆகவே இக்கடிதம்.

நலம்… நலமறிய ஆவல்!!!

இப்படிக்கு,
வெங்கடேஷ்.

கஷ்ட காலத்தில் நட்புகளுக்கும், உறவுகளுக்கும் தோள் கொடுக்காமல் பின்பு எதை முன்னேற்றம் எனப் பீற்றிக் கொள்கிறோம்? கையடக்கக் கருவிகளால் நாம் உலகத்தை மட்டும் சுருக்கவில்லை; மனித உறவுகளையும் தான்.

பாலகுமாரின் கைகள் அனிச்சைச் செயலாக வெங்கடேஷின் எண்ணை அழுத்தின. ஆனால் தொடர்பு அறுக்கப்பட்டிருந்தது.

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *