பெண்ணின் தேடல்…

பெண்ணின் தேடல்…

உறவுகள் (மே 2014) நாவலில் இருந்து…

ஓர் பெண் மழலையாய்ப் பிறந்து, மனைவியாக பரிணாமம் கொண்டு, தாயாகப் பயணிக்கின்றாள். அவளின் வாழ்க்கைப் பயணம் நிறைவாக முடிகின்றதா, அல்லது ஒருவிதத் தேடலுடன் தொடங்கி தொடர்கின்றதா? சிந்தியுங்கள்!

அடிமனதின் ஆசைகள் அனைத்தும் என்றாவது ஓர் நாள் ஈடேறும் என்று ஒவ்வொரு பெண்ணின் மனமும் அன்றாடம் ஏங்கிக் கொண்டிருக்கும் என்பதை நாம் அறிவோமா? அறிந்தாலும் அதை முற்றிலும் தான் உணர்வோமா? சிந்தியுங்கள்!

அம்மாவைக் கட்டி முத்தமிட விழைகிறேன், மழலையாய்
அப்பாவின் வயிற்றில் குத்துவிட விழைகிறேன், குழந்தையாய்
டேய் அண்ணா என்றழைக்க விழைகிறேன், சிறுமியாய்
தோழியுடன் கணக்கில்லாமல் பேச விழைகிறேன், சிறு பெண்ணாய்
என் ஜீவன் தோளில் சாய்ந்து கொள்ள விழைகிறேன், மங்கையாய்
பிள்ளைகளுடன் அவர்கள் நரைகாணும் வரை கூடிவாழ விழைகிறேன், தாயாய்
பிள்ளைகளின் சந்ததிகளுடன் ஓடியாட விழைகிறேன்,
மீண்டும் மீண்டும் ஓர் மழலையாய்!!
என் ஏக்கங்கள் என்னோடு, என்னுள்ளே!

இவை தான் ஓர் பெண்ணின் ஏக்கங்களாக அடி மனதில் புதைந்திருக்கும். தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றும் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன், கண்களில் ஓர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாள்.

சிலப் பெண்களுக்கு, சில ஏக்கங்களின் பக்கங்கள் புரட்டப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்தப் பக்கங்கள் தங்கள் மனதின் ஆழத்தில் புதையுண்டே கிடக்கின்றன. இந்தப் புதையலை, வருடங்கள் கடந்து அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கும் வல்லமை எவருக்கேனும் இருந்தால் அவர்களை நாம் போற்ற வேண்டும்! பாராட்ட வேண்டும்!

குழந்தைப் பருவத்தில் இருக்கும் ஓர் பெண், நோய்க்கு இரையாகும் அன்னையை மீட்க வழி தெரியாமல், வேதனையில் இருந்து மீளவும் தெரியாமல் தத்தளிக்கின்றாள். உற்றார் உறவினரின் பேச்சுக்கு ஆளாகும் அந்தப் பிஞ்சு மனதின் வேதனைகளைச் சொல்லி மாளாது; எழுதியும் தீராது!

தாயில்லாமல் வளரும் பெண்ணுக்கு, தந்தை அளவில்லா அன்பைப் பொழிய, உடன் பிறந்தவன் பாசத்தைப் பயிர் செய்ய எனக் காலச் சக்கரம் தடையில்லாமல் சுழன்றாலும், பருவம் எய்தும் வயதில் அந்தப் பெண், தன் தாயின் அரவணைப்புக்கு ஏங்குகிறாள்.

அந்தப் பருவ வயதில் ஓர் தந்தையிடம் அந்தப் பெண் எதை எதிர்பார்க்கிறாள்? தாயின் புரிதலை. அப்பொழுது தான் அவளின் தேடலும் ஆரம்பமாகிறது. எவரேனும் அவள் மனதைப் புரிந்து கொள்வார்களா? தன் நேசத்தை உணர்வார்களா? என்ற அந்தத் தேடல்!

உதாரணமாக, காலங்கள் உருண்டாலும், நேரங்கள் புரண்டாலும், நேசத்தையும் பந்தத்தையும் அழிக்க முடியாது என இறுமாந்திருந்த அவள் உடன் பிறப்பின் பாசம், அவனின் அகந்தையால் சின்னாபின்னமாகி அமிழ்ந்தாலும், என்றேனும் இந்நிலை மாறும் என அமைதியை ஆயுதமாக்கிக் கொண்ட, தங்கையின் பாசத் தேடல் மட்டும் மாறாமல் தொடரும்…

தோழிகளுடன் வளைய வரும் பருவத்தில், திருமண பந்தத்தில் சிக்குண்ட ஓர் மனைவி, கணவனிடம் தோழியின் அரவணைப்பை எதிர்பார்க்கிறாள். ஆனால் அதிகாரத் துறையைத் தன் மூச்சாகக் கருதி, அதை நித்தமும் தன் வேலையாகக் கையில் எடுத்துக் கொண்ட அந்தக் கணவன், வீட்டிலும் அதையே கடைப்பிடித்தால்? புன்னகையை மட்டும் வழித்துணையாகக் கொண்டு மனைவியின் அன்புத் தேடல் முற்று பெறாமல் தொடர்கிறது…

நரை கொண்ட காலத்தில், மகனிடம் நிபந்தனையற்ற அன்பைக் கொண்டு, நரை காணா அன்புடன் கூடி வாழ நினைக்கிறது. ஆனால் சுயநலம் என்ற ஒன்றை தத்தெடுத்துக் கொண்டு, அதையே தன் பிள்ளை போல் சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் மகன், அந்தப் பிள்ளையின் போக்கில் அவன் கால் தடத்தையும் பதிக்கின்றான். தாயின் உள்ளத்தையும் மிதிக்கின்றான். அவன் சென்ற தடத்தில் அழுந்தப் பதிந்தக் கால் தடங்களை வழிகாட்டியாகக் கொண்டு ஓர் தாயின் அக்கறைத் தேடல் துவங்குகிறது.

பெண்ணே, நீ தாய்மை அடைந்தவுடன் ஆரவாரம் செய்து போற்றாமல், ஆணித்தரமாக, ஆண் குழந்தையைத் தான் பெற்றெடுக்க வேண்டும் என்று வதைக்கும் கணவனுக்கு ஓர் உண்மைத் தெரியுமா? முதலில் அது உனக்கே தெரியுமா?

நீ ஆண்குழந்தையைப் பெறுவதால் உன் வாழ்நாளின் பல வருடங்களை பணயம் வைக்கிறாய் என்று. பின்லாந்தில் நடந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்ட உண்மை இது. ஆனால் இந்த உண்மையை அந்தத் தாய் அறிந்தாலும் ஒரு கணமேனும் தன் முடிவை மாற்றிக் கொள்வாளா, இல்லை, அந்த மகவின் மேல் தான் கோபம் கொள்வாளா? அதை மாபெரும் பாக்கியமாக அல்லவா கருதுவாள்!

தன் வாழ்நாளை பணயம் வைக்கும் உன் தாய்க்கு கைமாறாக உன் வாழ்க்கைத் துணையைத் தேர்தெடுக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டாம். ஆனால் அந்த வாழ்க்கைத் துணையோடு கை கோர்ப்பதைக் காணும் பாக்கியத்தையாவது தரலாமே? நீ தன்னலத்துடன் இருப்பதைப் போல் உன் அன்னையும் அவள் உயிரே பெரிது என்று நினைத்தால் நீ இவ்வுலகைப் பார்த்திருப்பாயா?

தன் இளம் வயது தோழியுடனான நட்பு இன்றுவரையிலும் இனிதாகத் தொடர, அதை தன் அதிர்ஷ்டம் என அவள் கருதி களித்திருந்த வேளையில் நட்புக்கும் களைப்பு தீண்டியதோ? மனவேறுபாட்டினால் இளைப்பாறத் தூண்டியதோ? கடந்த கால நினைவுகளை ஆயுதமாக்கிக் கொண்டு அந்தத் தோழியின் நட்புத் தேடலும் தொடர்ந்தது…

தள்ளாத வயதில் பிள்ளைகளின் மழலைகளுடன் தானும் ஓர் மழலையாய் மாறி ஓடியாடி களிக்க நினைக்கையில், வெளிநாடு பிள்ளையைத் தத்தெடுத்துக் கொள்ள, அந்தத் தாயின் மனதை வெறுமை தத்தெடுத்துக் கொள்கிறது. என்று நிறைவேறும் இந்த ஏக்கம் என கண்களில் ஒளியுடன், மனதில் வலியுடன் தன் தேடலைத் தொடங்கி வாழ்நாள் முழுவதும் காத்திருக்கிறாள்… தேடல் என்ற புதைகுழியில் விழுந்து தன்னையே தொலைக்கிறாள்.

ஓர் அன்னை, தன் மகள் தேசம் கடந்து பல்லாயிரம் மைல்கள் வாழ்ந்தாலும், மனதால் அருகில் இருப்பதை போல் உணர்வார், அல்லது அந்த மகள் அவ்வாறு உணர வைப்பாள். அதே ஓர் மகன் அருகில் இருந்தாலும் பல்லாயிரம் மைல்கள் தூரம் மனதால் விலகி இருப்பான், அல்லது அவ்வாறு உணர வைப்பான். ஏன் இந்த வேறுபாடு? மீண்டும் சிந்தியுங்கள்!

ஓர் தந்தையின் மனதை, ஓர் கணவனின் மனதை, ஓர் மகனின் மனதைப் புரிந்து கொள்ளும் ஓர் பெண்ணின் மனதை மட்டும் வேறொரு பெண் தான் புரிந்து கொள்ள வேண்டுமா? ஆண்கள் சிறிதேனும் முயற்சிக்கக் கூடாதா? சிந்தியுங்கள்! பெண்களின் தேடல் உங்களால் முற்றுப் பெறக்கூடும்! மீண்டும் சிந்தியுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *