ஆகஸ்ட் 2013 – ஓம் சக்தி நாளிதழில் பி. லாவண்யா பெருமாள்சாமி என்ற பெயரில் வெளியானது.
“வர வர உங்க அப்பாக்கு என்னாச்சுன்னே தெரியலை. எதையுமே ஒழுங்கா செய்யமாட்டேங்கிறார்…” சமயலறையில் இருந்த அம்மா என் காதில் கிசுகிசுத்தார்.
“அப்பா அப்படி என்ன தான் ஒழுங்கா செய்யலைம்மா?”
“ஷ்.. மெதுவா பேசும்மா. உங்க அப்பா காதுல விழுந்து வைக்கப் போகுது”
“அவ்வளவு பயம் இருக்குது இல்லை… அப்புறம் எதுக்கு புலம்பறீங்க…” என அம்மாவிடம் நான் சொல்லிக் கொண்டிருக்க, வரவேற்பறையில் இருந்த அப்பா என்னை ‘விது’ என்றழைத்தார்.
அவர் கூப்பிட்டதும் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த நான் கைகளைக் கழுவித் துடைத்துவிட்டு, “வரேன்ப்பா…” என முன்னறையில் இருந்தவரிடம் ஓடினேன்.
முன்னறையில் தந்தையைத் தவிர வேறு ஒரு நபரும் இருப்பதை அங்கே சென்ற பின்னர் தான் கவனித்தேன். அவனைப் பார்த்தால் விருந்தாளி போல் தெரியவில்லை!
அழுக்கு லுங்கி மற்றும் பழுப்பேறிய சட்டை அணிந்து, பரட்டைத் தலையுடன் இருந்தவன் வெளிவாசல் கதவுக்கு அருகில், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்ததைப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு.
யாரிவன் என்ற யோசனையில் மனம் ஈடுபட, கையில் பூட்டப்பட்டிருந்த விலங்கு அவனை ஒரு குற்றவாளி என பறைசாற்ற, அதிர்ச்சியில் என் இதயம் தாறுமாறாக இயங்க ஆரம்பித்தது.
காவல்துறையில் ஆய்வாளராகப் பணிபுரியும் என் தந்தை ஒரு குற்றவாளியை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். சற்று முன்பு என் அன்னை புலம்பினது ஏன் என்று இப்பொழுது புரிந்தது.
அவன் முன்னிலையில் தந்தையிடம் இதைப் பற்றி ஒன்றும் கேட்க இயலாமல் “என்னப்பா? சொல்லுங்க…” என இயல்பாகக் கேட்டேன்.
“இன்னைக்கு வெயில்ல ரொம்ப நேரம் நின்னு வேலை செஞ்சதால, கால் வலிக்குதும்மா. பிடிச்சு விடறியா?” என்றார்.
எப்பொழுதும் செய்வது தான் என்பதால் மறுக்காமல் அவர் காலுக்கடியில் அமர்ந்து சற்று நேரம் அவர் கால்களைப் பிடித்துவிட்டேன். தந்தையும் வழக்கம் போல் என் கல்லூரிப் படிப்பைப் பற்றி, தம்பியைப் பற்றி, நண்பர்களைப் பற்றி என பல விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டார்.
குற்றம் புரிந்த ஒருவனின் முன்னால் இப்படி எல்லாம் சொந்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டுமா என்று எனக்கு ஒருவித அவஸ்தையாக இருந்தது என்றாலும் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லாமல் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில், “சரி பாப்பா. பசிக்குது. போய் சாப்பாடு எடுத்துட்டு வாம்மா. இங்கேயே சாப்பிடறேன். அப்படியே இன்னொரு தட்டும் கொண்டு வந்து அவனுக்கு வை” என அந்தப் பரட்டை தலையை சுட்டிக் காண்பித்தார்.
தலையாட்டிவிட்டு சமையலறைக்குள் சென்றது தான் தாமதம், “நான் சொன்னப்போ என்னவோ என்னைத் திட்டினே. இப்போ புரிஞ்சதா? ஒரு வயசு பொண்ணு இருக்கும் வீட்டுக்கு இப்படியா அக்கியூஸ்டை கூட்டிட்டு வருவாரு?” என அம்மா பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்.
தந்தை ஏன் இப்படி செய்கிறார் எனப் புரியாத காரணத்தால் என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அதனால் அமைதியாக தந்தை சொன்னதைப் போலவே இரண்டு தட்டுக்களை எடுத்துக் கொண்டு முன்னறைக்குச் சென்றேன்.
நான் சென்ற பொழுது அந்தக் குற்றவாளியின் வலது கையில் இருந்த விலங்கை அகற்றி, அதை கிரில் கதவில் மாட்டிக் கொண்டிருந்தார் தந்தை.
அம்மாவும் நானும் சாப்பாட்டைப் பரிமாற, அவன் தயங்கித் தயங்கித் தான் உணவை உண்டான். உணவை முடித்த தந்தை இப்போது என்னை அழைத்து அவரின் இரு சக்கர வாகனத்தைத் துடைத்து வைக்கச் சொன்னார்.
அடிக்கடி செய்யும் வேலை தான் என்றாலும் இப்படியா அனைத்தையும் ஒரு குற்றவாளியின் முன்னால் செய்யச் சொல்வது என எனக்குமே எரிச்சல் எட்டிப் பார்த்தது.
இருந்தும் ஒரு குற்றாவாளியின் முன்னால் என் தந்தையை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் அவர் சொன்னதை மறுவார்த்தை பேசாமல் செய்து முடித்தேன்.
சற்று நேரத்தில் ஒரு ஆட்டோவை வரவழைத்த என் தந்தை அந்தக் குற்றவாளியை உடன் ஏற்றிக் கொண்டு காவல் நிலையத்திற்குக் கிளம்பிவிட்டார்.
ஆட்டோவில் போவதற்கு எதற்கு ஸ்கூட்டரை துடைத்து வைக்கச் சொன்னார் என எனக்கு சுறுசுறுவென்று எரிச்சல் கூட, இப்போது புலம்புவது என் முறையாயிற்று.
வரட்டும் இந்த அப்பா… கூடிய என் எரிச்சல் இரவு வரையிலுமே குறையவில்லை. அன்றிரவு வீடு திரும்பிய தந்தையிடம் முதல் வேலையாக என் அதிருப்தியைத் தெரிவித்து அவரின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை என்றேன்.
நான் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த தந்தை, நான் படபடவென்று பொரிந்து முடித்ததும் சிரித்தார். பின்னர், “நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று உனக்குத் தெரிய வேண்டும். அவ்வளவு தானே?” என்றவர் காரணத்தை விளக்கத் தொடங்கினார்.
“திருட்டுத் தொழில் செய்யும் ஒருவன் எந்நேரமும் உலகத்துக்குப் பயந்து, போலீஸில் அகப்பட்டுவிடுவோமோ என அமைதியை இழந்து வாழ வேண்டி இருப்பதோடு அவனுக்கென்று ஒரு அழகானக் குடும்பம், அன்பான குழந்தைகள் என அமைவதற்கும் வாய்ப்பில்லை.
இதே மனிதன் நேர்மையான வழியில் தனக்குத் தெரிந்த வேலையை செய்து பிழைத்தால், தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்து அன்பாக, நிம்மதியுடன் வாழலாம் என்ற எண்ணம் தோன்றலாம்.
ஒரு குடும்பத்தை, அவர்களுக்குள் இருக்கும் அன்னியோனியத்தை, ஒற்றுமையை அவன் நேரடியாகப் பார்த்தால் தனக்கென்று இப்படி ஓர் குடும்பம் அமைந்தால் நன்றாக இருக்குமே என ஒரு கணம்… ஒரே ஒரு கணம் அவன் எண்ணினால், தவறான வழிக்குச் செல்லத் தயங்குவான்.
இன்று வீட்டுக்கு வந்தவன் பலமுறை திருட்டுக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவன். அடிக்கடி ஜெயிலுக்குப் போனவன் தான் என்றாலும் இதுவரையில் திருடுவதை விடவில்லை.
அதனால் தான், நமது குடும்பத்தை, நமக்குள் உள்ள நேசத்தைப் பார்த்தாவது வாழ்க்கையில் அவன் இழந்துவிட்ட சந்தோசங்களை எண்ணிப் பார்த்து, மனம் வருந்தி, திருந்தக்கூடும் என்ற நப்பாசையில் தான் அந்தக் குற்றவாளியை இன்று நம் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
எந்த திருடனுமே பிறக்கும் பொழுதே திருடனாகப் பிறப்பது இல்லையே. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தானே அவனைத் திருடனாக மாற்றிவிடுகிறது” எனச் சொல்லி நிறுத்தினார்.
“இதனாலெல்லாம் அவன் திருந்துவான் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என என் சந்தேகத்தைக் கேட்டேன்.
“நம் குடும்பத்தைப் பார்த்து அவன் திருந்துவானா என எனக்குத் தெரியாது. ஆனால் முயற்சி செய்து பார்க்கிறதும் தப்பில்லையே. என்றாவது ஒரு நாள், ஒரு குற்றவாளி திருந்தினால் அதுவே பெரிய வெற்றி அல்லவா?” என தந்தை விளக்கினார்.
தந்தை சொல்வதும் நியாயம் தானே? அவர் முயற்சி வெற்றியடையட்டும்! அவர் மேல் தேவையில்லாமல் எரிச்சல் கொண்டேனே என மானசீகமாக அவரிடம் மன்னிப்பை வேண்டினேன்.