மின்மினிக் கனவுகள் (மார்ச் 2017) நாவலில் இருந்து…
மனித உணர்வுகள் என்றுமே அழகானவை!! அற்புதமானவை!! ஆழ் மனதில் கடைந்து நெய்யப்பட்டவை… ஒருவருக்கொருவர் மாறுபட்டவை!
மனித மனதில் மலரும் இயல்பான உணர்வுகளை வெட்டிச் சாய்க்கவோ, சுட்டுப் பொசுக்கவோ நமக்கு என்ன உரிமை இருக்கிறது? இயற்கைப் பற்றி மனிதன் அறிந்த விஷயங்கள் மிகவும் சொற்பமானவை.
ரோஜாவை போல் முட்களிலும் பூக்கள் உண்டு. கண்டங்கத்தரியைப் போல் பூக்களிலும் முட்கள் உண்டு. இரண்டுமே பயனளிப்பவை. இவ்வியற்கைப் படைப்புகளை ரசிக்கத் தெரிந்த, புரிந்து கொள்ள முடிந்த, வியக்க முடிந்த நம்மால், மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறுவதேன்?
உடலில் ஏற்படும் சில உயிரியல் மாறுபாட்டால் எதிர்பாலினமாக சிலரின் அகம் உணரத் தொடங்கும். ஆணாகப் பிறந்து பெண்களாக மலரத் துடிப்பார்கள். பெண்களாகப் பிறந்து ஆணாகப் பறக்கச் சிறகை விரிப்பார்கள்.
இயற்கையாகவே மலரும் இந்த மனித உணர்வுகளின் அழகை ரசிக்காமல், அற்புதத்தை வியக்காமல் சமூகம் என்ற பெயரில் அவ்வுணர்வுகளைக் கொன்று புதைத்திடவே நினைக்கிறோம்.
மீறி வெளிவரத் துடித்தாலும், சமூகம் விளக்கமாகத் தரும் வார்த்தைகள் கனமானவை… அதைக் கேட்டு வாழ்வது என்பது கடினமானவை… நம்பிக்கையை அடியோடு சாய்ப்பவை…
திருநம்பிகளைப் (பெண்ணாகப் பிறந்து ஆணாக உணர்வது) பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
திருநங்கைகள் (ஆணாகப் பிறந்து பெண்ணாக உணர்வது) தங்களை வெளிப்படுத்திக் கொண்ட அளவிற்கு திருநம்பிகள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அது நம் சமூகத்தில் அத்தனை எளிதல்ல…
திருநங்கைகளைப் பரவலாக ஏற்றுக் கொண்ட நம் சமூகம், திருநம்பிகளை இன்றுமே உதாசீனப்படுத்திக் கொண்டும், புறக்கணித்துக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.
பெண்ணையே அடக்கி, ஒடுக்கி கட்டுப்படுத்த நினைக்கும் இந்த ஆணாதிக்க சமூகம், பெண்ணின் உடலில் உள்ள ஆண்மையை எங்கனம் அங்கீகரிக்கும்?
தங்கள் கூட்டிலிருந்தே வெளி வரத் தயங்குகிறார்கள் இவர்கள். பெண் என்றால், அவளுக்குத் திருமணத்தை நடத்தி, அவள் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து, அவள் உணர்வுகளைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் செயல்படுகின்றனர் பெற்றோர்கள்.
அதற்கேற்ப சமூகமும் தங்களின் பங்குக்கு இவர்களின் உள்ளுணர்வுகளைச் சிதறடித்துச், சிதைக்கின்றனர்.
பெண்ணின் உடலில் ஆண்மையை உணர்பவர்களுக்கு என்றுமே சாபக்கேடா? கருவறையில் அடுத்த சந்ததிகளை சும எனக் கூறி அவளுக்குள் வாழும் அந்த அவனை வெளிவரவிடாமலேயே கருவிலேயே கொல்கின்றனர்.
தொடர்ச்சியான நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் இருந்து கொண்டே இருந்தால் அவர்களால் எப்படித் தங்கள் கனவுகளை நோக்கிப் பறக்க முடியும்? இல்லை, வாழத் தான் முடியும்?
இவர்களைப் பற்றிய விழிப்புணர்வின்மையே இவற்றுக்கு எல்லாம் காரணம். பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் புரிந்து கொள்ள முடியாத இவர்களை யார் புரிந்து கொள்வார்கள்? சிந்தியுங்கள்! சிறகை விரிக்க விடுங்கள்…. பறக்கட்டுமே….