மின்மினிக் கனவுகள் (மார்ச் 2017) நாவலில் இருந்து…
தங்கையாய், தம்பியாய்
என் வானில் பறந்த சித்தியின் பிள்ளைகளைக்
காணச் செல்லும் பள்ளி விடுமுறை!
களைப்பில் இரவு பெரியவர்கள் உறங்க
களிப்பில் சிறியவர்கள் கத்தி முழங்க
என்ன பேசினோம் என்றே தெரியாமல் கதைத்து
உறக்கத்தைத் துரத்தும் விடுமுறை!
வயிற்றுக்குள் சென்ற உணவு செரித்து
காலியான வயிறு மீண்டும் பசித்து
அரவமில்லாமல் அடுக்களையில் புகுந்து
நளபாகத்தைத் தொடங்கி,
தோசைச் சாப்பிட்டு ஏப்பம்விட்ட விடுமுறை!
மீண்டும் படுக்கையில் விழிகள் இருளை வெறிக்க
மூளை தாங்காமல் வேலை நிறுத்தம் செய்ய
இமைகள் பாரம் தாளாமல் மூட
உதடுகளோ பேசி அழிச்சாட்டியம் செய்யும் விடுமுறை!
உறக்கத்தை தழுவும் நேரத்தில்
‘விடிஞ்சுடுச்சு’ என்ற பெரியவர்களின் குரலில்,
‘தூங்க நேரமாயிடுச்சு…
இன்னைக்கு ஒரு நாள் மட்டும்’ என்று
ஒப்பந்தம் பேசி, தூங்கிய விடுமுறை!
அன்றிரவும் ஒப்பந்தம் குதூகல காற்றில் பறக்க,
மீண்டும் அதே கதை தொடரும் விடுமுறை!
ஏன்? விடுமுறையின் இறுதி வரையிலுமே
தொடரும் இக்கதை!
பேச்சிற்குத் தான் பொருளில்லை
ஆனால், பேசிய நிமிடங்களுக்கு?
மீண்டும் என்று வரும்
விடுமுறையில் சென்ற எங்கள்
அர்த்தமுள்ள விடுமுறை?